Thursday, August 27, 2009

ராஜபக்சேவை சர்வதேச போர்குற்றவாளியாக உலக நாடுகள் அறிவிக்க வேண்டும் - வைகோ


தமிழர்களைக் கொன்று குவிப்பதில் இலங்கை அரசு நடத்திய ரத்த வெறியாட்டங்கள் அம்பலத்துக்கு வந்தே தீரும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கையின் சிங்கள கொலைபாதக அரசு, தமிழ் இனத்தை கரு அறுக்கும் திட்டத்தோடு, கோரப் படுகொலைகளை நடத்தி வருகிறது என்று தொடர்ந்து நாம் கூறிவந்த குற்றச்சா‌ற்றுகள், நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு மறுக்க முடியாத சாட்சியம் கிடைத்துள்ளது.

உலகில் இருட்டடிப்பு செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களையும், அவலங்களையும் லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. அதே தொலைக்காட்சி, நேற்றைய தினம் வெளியிட்டு உள்ள தமிழர் படுகொலை காட்சிகள், இருதயத்தை பிளக்கின்றன.

கடந்த ஜனவரி மாதத்தில் தமிழ் இளைஞர்கள் இலங்கை ராணுவத்தால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளை அந்தத் தொலைக்காட்சி கடந்த திங்கள்கிழமை ஒளிபரப்பியுள்ளது.

அந்த இளைஞர்களை முழு நிர்வாணமாக்கி, கைகளை பின்புறமாகக் கட்டி விலங்கிட்டு, தரையில் உட்கார வைக்கப்பட்டு அவர்களின் தலையிலும், பிடரியிலும், முதுகிலும் இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் காட்சிகள் அத் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம்பெற்றுள்ளன.

அந்தத் தமிழ் இளைஞர்கள் உயிர் பிழைக்க முயன்று, குண்டுகள் சீறி வரும்போது தலையை அங்குமிங்கும் அசைப்பதும், அதையும் மீறி அவர்கள் உடலில் குண்டுகள் பாய்ந்து அவர்கள் துடிதுடிக்க இறப்பதையும் பார்க்கும்போது, நம் உள்ளம் வேதனை அடைகிறது.

சிங்கள ராணுவம் செய்து இருக்கின்ற படுகொலைகளுக்கு அனைத்து நாடுகளின் அரசுகளும் கண்டனம் தெரிவிப்பதோடு, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கள ராஜபக்சே அரசையும், ராணுவ தளபதிகளையும், கொடுஞ் செயலில் ஈடுபட்ட ராணுவத்தினரையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டிக்க முன்வர வேண்டும்.

முல்லைத் தீவு மாவட்டத்தில், வன்னிப் பிரதேசத்தில், இப்படி நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இக்கொடுஞ் செயலுக்கும், தமிழர்கள் சிந்திய ரத்தத்துக்கும், சிங்கள அரசு மட்டும் அல்ல, இந்திய அரசும் பொறுப்பாளி ஆகும். தமிழர்களின் அழிவுக்கு காரணமான ஆயுதங்களையும், அனைத்து ராணுவ உதவிகளையும் அளித்த இந்திய அரசுக்கு தமிழர் வரலாற்றில் எந்நாளும் மன்னிப்பு கிடையாது எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

No comments:

Post a Comment